Regional01

விதிமீறிய ஆட்டோக்கள் மீதான வழக்குகள் விவரம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: ஆட்டோக்களில் 3 பேர்களை மட்டுமே ஏற்றிச் செல்ல அனுமதி உள்ளது. ஆனால், மதுரையில் பெரும்பாலான ஆட்டோக்களில் 10 முதல் 12 நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால், ஆட்டோக்கள் விபத்தில் சிக்கிப் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிகப்படியான ஆட்டோக்களால் மதுரையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மதுரை நகரில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 2019 வரை 5,017 வழக்குகள் பதிந்து சுமார் ரூ.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும் ஆட்டோக்களில் அதிகளவு பயணிகள் ஏற்றிச்செல்வதை நிறுத்தவில்லை. எனவே, விதியை மீறி அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மதுரை நகரில் 16,200 ஆட்டோக்கள் உள்ளன. விதிமீறல் தொடர்பாக 2016 முதல் 2019 வரை 1,065 ஆட்டோக்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ஆட்டோக்களில் 10 பேருக்கு மேல் செல்லும் போது விபத்து நிகழ்ந்தால் பாதிக்கப்பட்டோர் சார்பில் இழப்பீடு கோர முடியாது. மதுரை உட்பட தமிழகம் முழுவதும் எவ்வளவு ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளன. விதிமீறல் தொடர்பாக எத்தனை ஆட்டோக்கள் மீது வழக்குப் பதிவாகியுள்ளன என்ற விவரத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT