வாடிப்பட்டி பகுதியில் வளர்ச்சிப் பணிகள் தொடர மாநில நிதிக் குழு நிதியை முழுமையாக வழங்க வேண்டும் என ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது. ஆணையர்கள் ராஜா, சாந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் தனலெட்சுமி வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) சக்திவேல் தீர்மான அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றியப் பொறியாளர் பூப்பாண்டி, வட்டார விரிவாக்க அலுவலர் வீரலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாதந்தோறும் வழங்கும் மாநில நிதிக் குழு நிதி ரூ.17 லட்சம். ஆனால், கடந்த பிப்ரவரி முதல் ரூ.5 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது.
யூனியன் அலுவலக மாதாந்திர செலவு ரூ.12 லட்சமும், டெங்கு
பணிக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது. கூடுதல் செலவினங்களால் இருப்பு நிதி குறைந்து பற்றாக்குறை ஏற்படுகிறது. வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது. மாநில நிதிக் குழு நிதியை முன்பு போல் வழங்க வேண்டும். டெங்கு பணிக்குரிய செலவினங்களை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்.
நீர்நிலைகளை பாதிக்கும் விதமாக மீன்பாசி ஏலம் விடும் ஊராட்சி மன்றம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.