தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் வஉசி சந்தையை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு, அனைத்து வசதிகளுடன் நவீன வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது.
இந்த சந்தையில் சுமார் 650 கடைகள் உள்ளன. இந்த கடைகளின் வியாபாரிகள் மாநகராட்சியின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து வியாபாரிகள் அனைவரும் நேற்று கடைகளை அடைத்துவிட்டு மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி திமுக எம்எல்ஏ பெ.கீதாஜீவன், அதிமுக அமைப்புச் செயலாளரான முன்னாள்அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் அங்கு வந்து மாநகராட்சி ஆணையரை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இது மத்திய அரசின் திட்டம் என்பதால் வியாரிகளின் கோரிக்கையை மத்திய அரசுக்கு தெரியபடுத்தி, அதன்பின்னர் முடிவு செய்யபடும் என ஆணையர் தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து மனுகொடுப்பது என வியாபாரிகள் முடிவு செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்திய வியாபாரிகள் பின்னர் கலைந்து சென்றனர். இதனால் மாநகராட்சி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.