பாறை, குகை ஓவியங்களைப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே கோழியூத்தில் பாறை ஓவியங்கள், பழநி மலையில் ஆண்டிபட்டி பாறை ஓவியங்கள், பாப்பம்பட்டி பாறை ஓவியங்கள், விழுப்புரம் கீழ்வாழை பாறை ஒவியங்களில் விலங்குகளை வேட்டையாடுதல், சண்டையிடுதல், நடனம், போரிடுதல் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பாறை மற்றும் குகை ஓவியங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இவை பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து வருகின்றன. இதனால், இப்பாறை ஓவியங்களைப் பாதுகாக்கக் கோரி தொல்லியல் துறைக்கு மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
எனவே கோழியூத்து, ஆண்டிபட்டி, பாப்பம்பட்டி, கீழ்வாழை பாறை மற்றும் குகை ஓவியங்களைப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவித்து முறையாகப் பராமரிக்கத் தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், என்.புகழேந்தி அமர் வில் விசாரணைக்கு வந்தது. இம்மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.10-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.