மத்திய வேளாண் சட்டத்தைக் கண்டித்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை கண்டு கொள்ளாத மத்திய அரசை கண்டித்து கடலூரில் திமுகவினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் தலைமை தபால்நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.முன்னாள் எம்எல்ஏக்கள் இளபுகழேந்தி, ஐயப்பன், கடலூர் நகர ராஜா, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள், திமுகவினர் என ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “மோடியின் அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக, விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்தச் சட்டத்தை நீக்க வேண்டும், டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் மோடி அரசு. அவர்களை கண்டு கொள்ளவில்லை. விவசாயிகளுக்கு திமுகவின் ஆதரவு எப்போதும் இருக்கும்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.