Regional01

கரோனா பரிசோதனை முடிவுகள் தாமதம் சுகாதாரத் துறை அலட்சியத்தால் தவிக்கும் நோயாளிகள்

செய்திப்பிரிவு

மதுரை அரசு மருத்துவமனை தவிர மற்ற இடங்களில் கரோனா பரிசோதனை முடிவுகள் தாமதம் ஆவதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் ‘கரோனா’ பரவத் தொடங்கியபோது தனியார் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகள் மூடப்பட்டன.

அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ‘கரோனா’ சிகிச்சையுடன் புறநோயாளிகள் சிகிச்சை, அவசர உயிர் காக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது கரோனா பரவல் குறைந்ததால் தனி யார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால், மகப்பேறு, அறுவைச் சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப்பெறும் அவசர சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்துகின்றனர். அதில், நெகட்டிவ் என வந்தால் சிகிச்சை அளிக்கின்றனர். இல்லையென்றால் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு வரை தினமும் 300-க்கும் மேற்பட்டோருக்கு பரவிய நேரத்தில் கூட மாவட்டத்தில் அறிகுறிகளுடன் சென்று கரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு 3 நாட்களில் பரிசோதனை முடிவுகள் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், தற்போது கரோனா பரிசோதனை முடிவுகள் வர 7 முதல் 10 நாட்கள் ஆகின்றன. தற்போது தினமும் குறைவானவர்களே கரோனா பரிசோதனை செய்கின்றனர். அதனால், முன்பை விட விரைவாக சுகாதாரத்துறை பரிசோதனை முடிவுகளை வழங்கலாம். ஆனால், மதுரை அரசு மருத்துவமனை தவிர புறநகர் பகுதியில் பரிசோதனை முடிவுகள் வரத் தாமதமாகிறது. முடிவுகளை விரைவாக வழங்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

பரிசோதனை முடிவு வழங்கத் தாமதம் ஆவதால் மருத்துவமனைகள் மகப்பேறு உள்ளிட்ட அவசரச் சிகிச்சை மேற்கொள்வதற்கு நோயாளி களை சிகிச்சைக்கு 10 நாட்களுக்கு முன்கூட்டியே கரோனா பரிசோதனை செய்வதற்கு அனுப்புகின்றனர். அதனால், பரிசோதனை முடிவுகள் தாமதமாக வரும்பட்சத்தில் அதற்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு கரோனா பாசிட்டிவ் வரவும் வாய்ப் புள்ளது. அதனால், கரோனா பரி சோதனை முடிவுகளை முன்பு போல் உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT