சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த திமுக-வினரை போலீஸார் தடுத்ததை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சேலம் கந்தாஸ்ரமம் அருகே உள்ள எஸ்ஆர்பி மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் திமுக-வினர் வந்தனர். அவர்களை போலீஸார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து திமுக-வினர் மறியலில் ஈடுபட்டனர்.
சங்ககிரி திமுக-வினரை வைகுந்தம் சுங்கச்சாவடியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனை கண்டித்து ஒன்றிய பொறுப்பாளர் ராஜேஷ் தலைமையில் சாலை மறியல் நடந்தது.
இதேபோல காடையாம்பட்டி ஒன்றியத்தில் இருந்து வந்த திமுகவினரை புளியம்பட்டியில் போலீஸார் தடுத்தனர். அங்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும், தம்மம்பட்டி மற்றும் தலைவாசலிலும் திமுக-வினர் மறியலில் ஈடுபட்டனர். ஆத்தூர் ஒன்றிய திமுகவினரை ராமநாயக்கன்பாளையத்தில் போலீஸார் தடுத்ததால், அங்கும் கொங்கணாபுரம், எடப்பாடி, வாழப்பாடி, கெங்கவல்லி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள் தடுக்கப்பட்டதால், அந்தந்த பகுதியில் திமுக-வினர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்த போலீஸார் அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். மறியல் போராட்டத்தால் மாவட்டத்தில் பல இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.