இயற்கை உரங்களை பயன்படுத்தி மண் வளத்தைக் காக்க வேண்டும் என விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் உலக மண்வள நாள் விழா நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் ஒன்றியங்களுக்குட்பட்ட மரிக்கம்பள்ளி, பெத்தனப்பள்ளி, பெத்ததாளப்பள்ளி, பெல்லாரம் பள்ளி, காள்வேஅள்ளி, மருதேரி, தட்ரஅள்ளி, மாரிசெட்டிப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 10 விவசாயிகளுக்கு மண்வள அட்டையை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கினார். அப்போது ஆட்சியர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெல், சிறு தானியம், எண்ணெய் வித்துப் பயிர்கள், பருத்தி, கரும்பு, காய்கறிகள், மலர்கள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 600 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சாகுபடி செய்யும் பயிர்களுக்கு அளிக்கப்படும் தழை, மணி, சாம்பல் சத்து 4:2:1 என்ற விகிதத்தில் இட வேண்டும். ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இச்சத்துக்கள் 5:2:1 என்ற விகிதத்தில் பயிர்களுக்கு கூடுதலாக அளிக்கப்படுகிறது. மண்ணைப் பற்றியும், அதன் தன்மையை அறியாமலும் தேவைக்கு அதிகமான செயற்கை ரசாயன உரங்களை பயன்படுத்தி தொடர் சாகுபடி செய்வதால் மண் வளம் குன்றி பணவிரயம் ஏற்படுவதுடன் மகசூலில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க மண் ஆய்வு செய்வது மிக அவசியம். ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் சண்முகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, வேளாண் உதவி இயக்குநர்கள் சுரேஷ்குமார்(தரக் கட்டுப்பாடு), முருகன், வேளாண்மை அலுவலக கண்காணிப்பாளர் குருராஜன் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.