கலப்பட சேகோ உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேகோ விற்பனை டெண்டரை உற்பத்தியாளர்கள் புறக்கணித்ததால் சேலம் சேகோ சர்வ் நிறுவனத்தில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
சேலம் குரங்குச்சாவடியில் சேகோசர்வ் நிறுவனம் உள்ளது. இங்கு சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் சேகோ மற்றும் ஸ்டார்ச் ஆகியவை தினமும் டெண்டர் மூலம் விற்பனை செய்யப்படும். இதில், சேகோ உற்பத்தியாளர்கள் பங்கேற்பார்கள்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து சேலத்துக்கு கலப்பட ஜவ்வரிசி மூட்டையுடன் ஒரு லாரி வருவதாக, நேற்று முன்தினம் சேகோ உற்பத்தியாளர்களுக்கு தகவல் வந்தது.
இதை அறிந்த உற்பத்தியாளர்கள், சேகோ சர்வ் அதிகாரிகள் உள்ளிட்டோர் குறிப்பிட்ட அந்த லாரியை சேலம் குரங்குச்சாவடி அருகே தடுத்தனர்.
மேலும், லாரியை உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், லாரி ஓட்டுநரும், சேகோ உரிமையாளரும் மறுப்பு தெரிவித்து, அங்கிருந்து லாரியை எடுத்துச் சென்றனர். இதனால், உற்பத்தியாளர்கள் மற்றும் சேகோ சர்வ் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு சென்ற சேகோ சர்வ் நிறுவனத்தின் தலைவர் தமிழ்மணி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, கலப்பட சேகோ தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
இந்நிலையில், கலப்பட ஜவ்வரிசி உற்பத்தியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று சேகோ சர்வ் நிறுவனத்தில் நடைபெற்ற விற்பனை டெண்டரில் உற்பத்தியாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இதுதொடர்பாக சேகோ உற்பத்தியாளர்கள் கூறும்போது, “சேகோ உற்பத்தியில் ஈடுபடுபவர்களில் 95 சதவீதம் பேர் கலப்படமின்றி தரமாக உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். ஆனால், ஒரு சிலர் கலப்பட ஜவ்வரிசியை உற்பத்தி செய்து, அதனை பில் இல்லாமல் வட மாநிலங்களுக்கு குறைந்த விலைக்கு அனுப்பி விற்பனை செய்கின்றனர். இதனால், சேகோ விலை குறைந்து, மரவள்ளி கிழங்கின் விலையும் குறைந்துவிட்டது. எனவே, கலப்பட சேகோ உற்பத்தியை தடுக்க வலியுறுத்தி, விற்பனை டெண்டரில் பங்கேற்கவில்லை” என்றனர்.
சேகோ சர்வ் நிறுவனத்தின் தலைவர் தமிழ்மணி கூறும்போது, “சேகோ விற்பனை டெண்டரில் உற்பத்தியாளர்கள் பங்கேற்காததால் ரூ.4 கோடிக்கு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளிடம் இருந்து மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் செய்வதையு ம் நிறுத்தப் போவதாக, உற்பத்தியாளர்கள் கூறினர். விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க, பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். கலப்பட சேகோ உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உற்பத்தியாளர்கள் டெண்டரில் பங்கேற்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.