கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங் களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்தனர்.
மதுரை நெல்பேட்டையில் உள்ள இந்த அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகமது யூசுப்பின் வீட்டுக்கு நேற்று முன்தினம் ஆந்திராவைச் சேர்ந்த அமலாக்கத் துறை பெண் உதவி அதிகாரி தலைமையில் 4 பேர் வந்தனர். அவர்கள் முன்னறிவிப்பின்றி வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.
அங்கிருந்த முகமது யூசுப் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தனர். வீட்டில் இருந்த சில ஆவணங்களையும் எடுத்து ஆய்வு செய்தனர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக இச்சோதனை நடந்தது. இதற்கிடையில், இச்சோதனையைக் கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் நெல்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மண்டலத் தலைவர் முகமது நசுருதீன், எஸ்டிபிஐ கட்சி மதுரை மாவட்டத் தலைவர் முஜிபுர் ரகுமான், ஐக்கிய ஜமாத் செயலர் காஜாமைதீன், இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகி ராஜாஉசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.