சேலம் சோனா கல்லூரியில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான எம்.பி.ஏ, எம்.சி.ஏ, முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விழாவுக்கு கல்லூரி துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா தலைமை வகித்தார். கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா, துணைத்தலைவர் சொக்கு வள்ளியப்பா காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனர். கல்லூரியின் முதலாமாண்டு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார்.
பெங்களூரு உலக வங்கி குழுமத்தின் ஆலோசகர் தேவ்யா, காணொலிக்காட்சி மூலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் பொழுது, கல்வியோடு தங்கள் துறை தொடர்பான தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்று இருந்தால் மட்டுமே இன்றைய போட்டி நிறைந்த சூழலில் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள முடியும். உயரிய லட்சியங்களே சாதனையாளர்களுக்கு வழிவகுக்கும்,’ என்று தெரிவித்தார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செல்வராஜ், பத்மா மற்றும் அஞ்சனி செய்திருந்தனர். பின்னர், மாணவ மாணவி களுக்கான வழிகாட்டுதல்கள், கல்வி உதவித்தொகை, பிறவசதிகள், அவற்றை பயன்படுத்திக்கொள்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. விழாவில் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டனர்.