கிருஷ்ணகிரி பகுதியில் 2-ம் போக சாகுபடிக்காக நெல் நாற்று நடவு செய்ய நிலங்களை விவசாயிகள் சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி அணை மூலம் 9012 ஏக்கர் விளைநிலங்களில் இருபோகம் நெல் விளைவிக்கப்படுகிறது. தற்போது முதல்போக சாகுபடி முடித்த விவசாயிகள், 2-வது போக சாகுபடிக்காக நெல் நாற்றுகளை நடவு செய்ய நிலத்தை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அவதானப்பட்டி, மணி நகர், செம்படமுத்தூர், நாட்டாண்மைக்கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் இயந்திரங்கள் மூலம் உழவுப் பணி மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘அணையில் 50 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால் 2-ம் போக நெல் சாகுபடிக்கு தடையின்றி நீர் கிடைக்கும். கடந்த ஆண்டு அணையில் மதகுகள் மாற்றிமைக்கும் பணி நடைபெற்றதால், குறைந்த நிலப்பரப்பில் நெல் நடவு மேற்கொள்ளப்பட்டது. தற்போது பரவலாக பெய்த மழையால் நெல் நடவுப் பரப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நிலத்தை இயந்திரம் மூலம் உழவு மேற்கொண்டாலும், நிலத்துக்கான அடி உரமாக இயற்கை முறையில் இலை, தழைகள் போட்டுள்ளோம். ஏற்கெனவே நெல் நாற்றுகள் விடப்பட்டுள்ளதால் நடவு பணிகள் இன்னும் 10 நாட்களில் தொடங்கும்,’’ என்றனர்.