டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வாடிப்பட்டியில் நாளை திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இது குறித்து மதுரை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக தலைமை அறிவித்துள்ளவாறு மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நாளை (டிச.5) காலை 9 மணிக்கு கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்தில் வடக்கு, தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரை மாநகர் திமுக சார்பில் அண்ணாநகர் அம்பிகா திரையரங்கம் அருகில் நாளை (டிச.5) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளதாக மாவட்ட பொறுப்பாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி ஆகியோர் அறிவித்துள்ளனர்.