சேலத்தில் இன்று (3-ம் தேதி) வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
சென்னையில் இருந்து முதல்வர் பழனிசாமி நேற்று கோவைக்கு விமானம் மூலம் வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அந்தியூருக்கு சென்று மறைந்த அவரது உறவினர் கருப்பகவுண்டர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
அங்கிருந்து கார் மூலம் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்துக்கு வந்த முதல்வர் அங்கு ஓய்வெடுத்தார்.
சேலம் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (3-ம் தேதி) சேலம் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் நடக்கிறது. இதில், முதல்வர் பங்கேற்று சேலம் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகள், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் தொடர்பாக ஆய்வு செய்து அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தொடர்ந்து இல்லம் திரும்பும் முதல்வர் மாலை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். பெருந்துறையில் இருந்து கார் மூலம் கொடுமுடி, கரூர் வழியாக மதுரை சென்று அங்கு நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். முதல்வர் வருகையையொட்டி, சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.