திருச்செந்தூர் ரதவீதி மற்றும் உள்தெருக்களில் புதிய சிமென்ட் சாலைகள் அமைக்க ரூ. 2.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக தெற்கு ரதவீதியில் கடந்த ஜுன் 5-ம் தேதி பணி தொடங்கியது. ஆனால் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணியால் சாலை அமைக்கும் பணி சுமார் 6 மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலை முழுவதும் தோண்டப்பட்ட நிலையில், குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு கூட பெரிதும் சிரமமடைந்து வருகின்றனர்.
சாலையை சீரமைக்க வலியுறுத்தி பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ஜெயந்தி நாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர துணைச் செயலாளர் வீ.ஆண்டி, பாஜக இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் ஜெய் ஆனந்த், அந்தணர் முன்னேற்ற கழக தொகுதி செய்தி தொடர்பாளர் கிருஷ்ணன் மற்றும் தெற்கு ரதவீதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் பேரூராட்சி மண்டல பொறியாளர் குழுவினர் நேரில் வந்து சாலையைபார்வையிடுவர் என, செயல்அலுவலர் ஆனந்தன் தெரிவித்தார். அதன்படி அதிகாரிகள் குழு தெற்குரத வீதிக்கு சென்று பார்வையிட்டது.
அப்போது நகர வளர்ச்சி ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர் ப.தா.கோட்டை மணிகண்டன் தலைமையில் பொதுமக்கள், அதிகாரிகளிடம் சாலைப்பணி குறித்து விரிவான விளக்கம் தருமாறு வலியுறுத்தினர்.
வரும் 7-ம் தேதிக்கு பின் பணிகள் தொடங்கப்பட்டு, 50 நாட்களுக்குள் சாலை சீரமைக்கப்படும் என, அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.