ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வெறும் 40 சதவீத வாக்குகளே பதிவானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 150 வார்டுகள் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு வாக்குச்சீட்டின் அடிப்படையில் தொடங்கியது. இந்நிலையில் 74 லட்சம் வாக்காளர்கள் உள்ள ஹைதராபாத் நகரில் நேற்று காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. நண்பகல் 12 மணி வரை வெறும் 18 சதவீதம், பிற்பகல் 4 மணி வரை 30 சதவீதம் என்ற அளவிலேயே வாக்குப் பதிவு இருந்தது. இந்நிலையில் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப் பதிவில் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஹைதராபாத் தேர்தல் வரலாற்றில் மிகக் குறைந்த வாக்குப் பதிவு இதுவேயாகும். அதிகமானோர் தேர்தலை விடுமுறை நாளாக கருதி வெளியே சென்றுவிட்டதே இதற்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே ஆளும் டிஆர்எஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே சில இடங்களில் வாக்குவாதம், கைகலப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. கூகட் பல்லி பகுதியில் அமைச்சர் அஜய் காரில் வந்து நேரடியாக பணம் பட்டுவாடா செய்வதாக கூறி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் அமைச்சரின் கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்தன. போலீஸார் தடியடி நடத்தி, கூட்டத்தினரை விரட்டினர். மலக்பேட்டா பகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சின்னங்கள் வாக்கு சீட்டில் மாறியிருந்தன. இங்கு நாளை மறுதேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஓரிரு சம்பவங்களை தவிர ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. வரும் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
ஹைதராபாத் எம்.பி.யும் ஏஐஎம்ஐஎம் தலைவருமான அசாதுதீன் ஒவைஸி வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேசிய அரசியலில் நான் லைலா போன்றவன், இதர கட்சிகள் அனைத்தும் மஜ்னு போன்றவை. ஏனெனில் எந்த தேர்தல் நடந்தாலும், எங்கள் கட்சி யாருடன் கூட்டணி வைக்கிறது? எந்தக் கட்சியுடன் ரகசிய கூட்டணி? என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது" என்றார்.