மதுரை பட்டாலியன் பயிற்சி மையத்தில் மதுரை, சிவகங்கையைச் சேர்ந்த 527 காவலர்கள் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா, மதுரை 6-வது பட்டாலியன் வளாகத்தில் நேற்று நடந்தது. மதுரையைச் சேர்ந்த 275 பேர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 252 பேர் 7 மாதப் பயிற்சியை நிறைவு செய்தனர். இவர்களில் 54 பொறியாளர்கள், 190 பட்டதாரிகள், 27 முதுநிலைப் பட்டதாரிகள், 52 தொழில்கல்வி பட்டதாரிகள், 43 டிப்ளமோ பட்டதாரிகளும் அடங்குவர். விழாவில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கூடுதல் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். புதிய காவலர்களின் பயிற்சி மற்றும் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் அவர் பேசுகையில், அரசின் அங்கமான போலீஸார் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றார். தென்மண்டல ஐ.ஜி. முருகன், காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, டிஐஜி ராஜேந்திரன், எஸ்பி சுஜித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.