Regional01

மணல் அள்ளி கைதானவர் தப்ப உதவிய ஊராட்சி தலைவர் கைது

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த ராமச்சந்திராபுரம் அருகே உள்ள காடத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆர்.வெங்கடேஷ்(19). இவர், கடியாபட்டி பகுதியில் ஆற்றில் அனுமதியின்றி லோடு ஆட்டோவில் நேற்று மணல் அள்ளியுள்ளார்.

தகவலின்பேரில் அங்கு சென்ற திருமயம் போலீஸார், வெங்கடேஷை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதுதொடர்பாக பேச காவல் நிலையத்துக்கு ஆயிங்குடி ஊராட்சித் தலைவர் பி.ராஜமாணிக்கம்(37) வந்தார். அப்போது, ராஜமாணிக்கம் வந்த காரில் ஏறி வெங்கடேஷ் தப்பிச் சென்றார்.

அந்தக் காரை பின்தொடர்ந்து போலீஸார் சென்றதை அறிந்த வெங்கடேஷ், கடைவீதியில் காரை விட்டுவிட்டு தப்பி ஓடினார். போலீஸார் விரட்டிச் சென்று அவரை கைது செய்தனர். காரை பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும், வெங்கடேஷ் தப்பி ஓடுவதற்கு உறுதுணையாக இருந்ததாக ராஜமாணிக்கத்தையும் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT