Regional02

பல்லடம் அருகே வங்கி கொள்ளை வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்த நபரிடமிருந்து 20 பவுன் நகைகள் மீட்பு

செய்திப்பிரிவு

பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், மூளையாக செயல்பட்ட நபரிடமிருந்து 20 பவுன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் மீண்டும் ஹரியாணா அழைத்துச் செல்லப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில், கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளைக் கும்பல் அங்கிருந்து பாதுகாப்புப் பெட்டகங்களை உடைத்து, தங்க நகைகள் மற்றும் ரூ.19 லட்சம் வங்கிப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். காமநாயக்கன்பாளையம் போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த ஜே.அனில்குமார் பன்வார், ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த ராமகிருஷ்ண ஆச்சாரி, ராமன்ஜீ அப்பா, ராஜஸ்தானை சேர்ந்த இசார் கான் ஆகியோர் கடந்த மார்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 86 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.11 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாவட்டம் தோடாபீம் தாலுகாவை சேர்ந்த கெஜராஜ் சிங் (33) என்பவரை 9 மாத தேடலுக்கு பிறகு, ஹரியாணாவில் வேறு ஒரு குற்றவழக்கில் அவர் கைது செய்யப்பட்டதை அறிந்த போலீஸார், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இதையடுத்து கடந்த 20-ம் தேதி கெஜராஜ் சிங், பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் மாலை அவர் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஹரியாணா அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கெஜராஜ் சிங் அளித்த தகவலின் பேரில் 20 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என்றனர்.

SCROLL FOR NEXT