மதுரையில் புட்டுத்தோப்பு மைதானம் வழியாக சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வைகை ஆற்றையொட்டி மாநில நெடுஞ்சாலைத்துறையால் இரு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் திண்டுக்கல் சாலையிலுள்ள காமராஜர் பாலம் பகுதியிலிருந்து ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வரை 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இச்சாலைப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கிராஸ் ரோடு சந்திப்பு அருகில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் நரசிம்மன், சசிகலா, ஸ்டாலின், பகுதிக் குழு உறுப்பினர் ஏ.பாண்டி மற்றும் புட்டுத்தோப்பு பகுதி பொதுமக்கள், ஒர்க்சாப் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியலைக் கைவிட்டனர்.