சாலையை சீரமைக்கக் கோரி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஓமலூர் அடுத்த பச்சனம்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர்.படம்: எஸ்.குரு பிரசாத் 
Regional01

சேலத்தில் மறியலில் ஈடுபட்ட 126 பேர் கைது

செய்திப்பிரிவு

சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, 49 பெண்கள் உள்ளிட்ட 126 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் ஓமலூர் அடுத்த பச்சனம்பட்டி கோலுக்காரனூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர், தங்கள் பகுதி சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுக்க வந்தனர்.

மனுவுடன் தங்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றையும் ஒப்படைக்கப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை தடுத்தனர். இதையடுத்து, போலீஸாருக்கும், கிராம மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, 49 பெண்கள் உள்ளிட்ட 126 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:

கோலுகாரனூரில் நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்கள் கிராமத்தில் இருந்து மேட்டூர் மெயின்ரோடு செல்லும் சாலை மோசமாக உள்ளது. இச் சாலையை சீரமைக்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

எனவே தான் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவுடன் எங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்தோம். சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT