கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப் பேட்டை அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி (எ) சுப்பிரமணி (57). இவரது மகள் அலுமேலுவுக்கும், தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் பொறிச்சிகல் (எ) வெங்கடராமபு ரத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் மகாதேவன் (28) என்பவருக்கும் திருமணம் நடந்தது. கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அலுமேலு பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
மேலும், விவகாரத்து கேட்டு ஊத்தங்கரை நீதிமன்றத்தில் அலமேலு வழக்குத் தொடந்தார். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சுப்பிரமணி, கம்பியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிங்காரப்பேட்டை போலீஸார் மகாதேவன், கொலைக்கு உறுதுணையாக இருந்ததாக வெங்கடா புரத்தைச் சேர்ந்த மாயன் என்கிற மாரியப்பன் (28) என்பவரையும் கைது செய்தனர். இக்கொலை வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட மகாதேவன், மாயன் என்கிற மாரியப்பன் ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.