சென்னை புழல் சிறைக்கு மாற்றக்கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ள முருகன் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம் இருப்பதாகவும் சிறைத் துறை நிர்வாகம் அளிக்கும் உணவை அவர் சாப்பிடவில்லை என்ற தகவல் நேற்று வெளியானது.
இது தொடர்பாக சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘முருகனுக்கும், அவரது மனைவி நளினிக்கும் பரோல் வழங்க வேண்டும். தங்களது நீண்ட நாள் கோரிக்கையான சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். உறவி னர்கள் அனைவரிடமும் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் பேச வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
ஆனால், உண்ணாவிரதம் இருப்பது தொடர்பாக முருகன் முறைப்படி சிறை நிர்வாகத் திடம் அவர் கடிதம் எதுவும் அளிக்கவில்லை. சிறை நிர்வாகம் அளிக்கும் உணவை அவர் சாப்பிடாவிட்டாலும் உலர் பழங்களை எடுத்துக்கொள்கிறார். அவரது உடல்நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சிறை நிர்வாகம் அளிக்கும் உணவை அவர் எடுத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரு கிறது’’ என தெரிவித்தனர்.