பழநி மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படும் மின் இழுவை ரயில் (கோப்புப் படம்) 
TNadu

பழநியில் நாளை முதல் மின் இழுவை ரயில் இயக்கம்; டிக்கெட் கவுன்ட்டர்கள் திறக்கப்படாது: ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு

செய்திப்பிரிவு

பழநி மலைக்கோயிலில் 8 மாதங்களுக்குப் பின் நாளை முதல் (டிச.1) 50 சதவீத பயணிகளுடன் மின் இழுவை ரயில் இயக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் செல்ல படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர். கரோனா கட்டுப்பாடால் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து ரோப்கார், மின்இழுவை ரயில் இயக்கப்படவில்லை. படிப்பாதையை மட்டுமே பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர்.

கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், பக்தர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து மின் இழுவை ரயிலை இயக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து பழநி கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார்பாடி அறிக்கையில் கூறியது: நாளை முதல் (டிச.1) அரசின் கரோனா விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டு 50 சதவீத பயணிகளுடன் மின் இழுவை ரயில் (வின்ச்) மலைக்கோயிலுக்கு இயக்கப்படவுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் மின் இழுவை ரயிலில் செல்ல www.palanimurugantemple.org- என்ற முகவரியில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது அவசியம். அடிவாரத்தில் டிக்கெட் கவுன்ட்டர் திறக்கப்படாது.

மின் இழுவை ரயிலில் இரு வழிப்பயணத்துக்குக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தோர் 15 நிமிடத்துக்கு முன்பாக மின் இழுவை ரயில் நிலையத்துக்கு வர வேண்டும்.

மின் இழுவை ரயிலில் பயணம் செய்வோர் மொபைல் போன் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களை எடுத்துச்செல்ல அனுமதியில்லை, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மாதங்களுக்குப் பின் நாளை முதல் மின் இழுவை ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT