மதுரை பைபாஸ் சாலையில் பழங்காநத்தம் செல்லும் வழியில் மேம்பாலம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் இருந்து நேற்று மாலை கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து அருகேயுள்ள குடியிருப்புவாசிகள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பெரியார் பஸ் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்த குடியிருப்பில் 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தைகள் பட்டாசு வெடித்தபோது, தீப்பொறி மெத்தையில் பட்டு குளிர்சாதன இயந்திரத்தில் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.