தஞ்சாவூர் கீழவாசல் ஆடக்காரத் தெருவில் ரமேஷ்( 45) என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட் களை வாங்கிவைத்து அவற்றை மொத்தமாக வெளியூருக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்த குடோனில் டன் கணக்கில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வெளியூருக்கு அனுப்பி வைப்பதற்காக சேமித்து வைக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று மாலை 6 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது . இதில், குடோனில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்களில் மளமளவென தீப்பற்றி, கொளுந்துவிட்டு எரிந்தது.
தகவலறிந்த தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய இடங்களில் இருந்து தலா 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவரவில்லை. விபத்து குறித்து தஞ்சாவூர் கிழக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேதமடைந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.