திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கேயுள்ள சுலோச்சனா முதலியார் ஆற்றுப்பாலத்தின் 178-வது ஆண்டு தொடக்க விழாவன்று, அப்பாலத்தை கட்டிய சுலோச்சனா முதலியாரை பெருமைப்படுத்தும் வகையில், அவரது வாரிசுகளை ஆட்சியர் விஷ்ணு கவுரவித்தார். படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

தாமிரபரணியில் பாலம் கட்டியவருக்கு மரியாதை சுலோச்சனா முதலியார் பேரனை கவுரவித்த நெல்லை ஆட்சியர்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள ஆற்றுப்பாலம் 1840-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்ப ட்டது. அப்போது பாலம் கட்டுவ தற்காக ஆட்சியரிடம் சிரஸ்தாராக பணியாற்றிய சுலோச்சனா முதலியார், தமது சொந்த பணம் ரூ. 50 ஆயிரம் வழங்கினார். அந்த பாலம் கட்டப்பட்டு 178 ஆண்டுகள் ஆவதையொட்டி ஆற்றுப் பாலத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிலையில், சுலோச்சனா முதலியாரின் கொள்ளுப்பேரன் பக்தவச்சலம் மற்றும் குடும்பத்தினர் திருநெல்வேலிக்கு வந்திருந்தனர். பாலம் கட்டியபோது வழங்கப்பட்ட செப்பு பட்டயம், பாலத்தின் வரைபடம் ஆகியவற்றை அவர்கள் வைத்திருந்தனர். அவற்றை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் அவர்கள் காண்பித்தனர். அவர்களுக்கு ஆட்சியர் சால்வை அணிவித்தார்.

மேலும், உறுமி அமைப்பினர் தயாரித்துள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலம் குறித்த ஒளிப்பட சிடியை ஆட்சியர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் சிரஸ்தார் வெங்கடாசலம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன், எழுத்தாளர் நாறும்பூநாதன், ஆசிரியர் கோ.கணபதிசுப்பிரமணியன், அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT