சேலத்தில் நடந்த கூட்டத்தில் நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை ஆட்சியர் ராமன் வெளியிட்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் பாமா புவனேஸ்வரி உள்ளிட்டோர். 
Regional01

வளம் சார்ந்த வங்கிக் கடனுக்கு ரூ.7,976 கோடி நிர்ணயம் சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

நபார்டு வங்கி சார்பில் 2021-22-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த வங்கிக் கடனுக்கு ரூ.7,976.82 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்..

நபார்டு வங்கி சார்பில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், 2021-22-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த வங்கிக் கடன் திட்ட அறிக்கையை ஆட்சியர் ராமன் வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) சார்பில், 2021-22-ம் ஆண்டுக்கான சேலம் மாவட்டத்துக்கான வளம் சார்ந்த வங்கிக் கடனாக ரூ.7,976.82 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2020-21-ம் ஆண்டுக்கான கடன் திட்டத்தை விட 4.97 சதவீதம் கூடுதலாகும். விவசாயத்துக்கு வங்கிக் கடன் ரூ.6,004.76 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.3,539.00 கோடி குறுகிய கால விவசாயக் கடனாகும்.

சிறு, குறு தொழில்களுக்கு ரூ.920.90 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயத்தில் மூலதனம் உருவாக்கும் விதமாக வங்கிக் கடன் அளிக்க வேண்டும். இதற்காக அரசின் மானிய கடன் திட்டங்களை அமல்படுத்துவது அவசியமாகும்.

விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், உணவுப் பாதுகாப்பு வழங்கிட விவசாயத்துக்கான வங்கிக் கடனை நிர்ணயிப்பதுடன், உற்பத்தியாகும் தானியங்களை சேமிக்க நபார்டு வங்கி மூலம் தானியக் கிடங்குகள் கட்டமைப்பு நிதியின் கீழ் கூடுதலாக தானிய கிடங்குகள் ஏற்படுத்த நிதி வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் (மாவட்ட வளர்ச்சி) பாமா புவனேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் னிவாசன், வேளாண் இணை இயக்குநர் கணேசன், மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் சகுந்தலா, தாட்கோ பொது மேலாளர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT