அயோத்தியாப்பட்டணம் அடுத்த காரிப்பட்டியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சித் தலைவர் மனோ சூரியன் தலைமையில் கிராம மக்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனு விவரம்:
காரிப்பட்டி ஊராட்சியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்நிலையில், சேலம்-ஆத்தூர் சர்வீஸ் சாலையையொட்டிய குடியிருப்புகள் நிறைந்த மையப் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
செல்போன் கதிர்வீச்சால் பெரியவர்கள், குழந்தைகள் என பொதுமக்கள் அனைவருக்கும் பல்வேறு நோய்களால் பாதிக்கும் நிலையிருப்பதாக அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், எங்கள் பகுதியில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பிரதானமாக இருந்து வருகிறது. செல்போன் கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு காரணமாக எங்கள் ஆரோக்கியம் மற்றும் கால்நடைகள் ஆரோக்கியம் பாதிக்கக் கூடும்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மக்களை பாதிக்கும் செல்போன் கோபுரம் அமைக்கும் தனியார் நிறுவனத்தின் பணியை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்ப்பை மீறி, செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்தால் போராட்டம் மூலம் எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.