Regional01

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 11-வது மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டம், மாவட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் கரூரில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது.

மாநிலத் துணைத்தலைவர் கோ.பழனியம்மாள் தொடக்க உரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் மு.செல்வராணி உள்ளிட்டோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

மாவட்டச்செயலாளர் கெ.சக்திவேல் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் பொன்.ஜெயராம் நிதி நிலை அறிக்கையும் வாசித்தனர்.

கூட்டத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 59 ஆக உயர்த்தியதை திரும்பப் பெறவேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

அவுட்சோர்சிங், மதிப்பூதியம், தொகுப்பூதிய நியமனங்களை கைவிட்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய ஏற்ற முறையிலான நியமனங்கள் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும்.

ஊதிய மாற்ற 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில துணைத்தலைவர் ரா.மங்களபாண்டியன் நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் அன்பழகன் வரவேற்றார். மாவட்ட இணைச்செயலாளர் கே.இளங்கோ நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT