மானிய கடனுதவி திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோர் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆர்வமுள்ள படித்த வேலையற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் சார்பில் மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை உற்பத்தி மற்றும் சேவை தொழிலுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீட்டுக்கு அதிகபட்ச மானியம் ரூ.30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, அதிகபட்ச மானியத் தொகை ரூ.50 லட்சமாக அரசு உயர்த்தியுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. இத்திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 21 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் வங்கிக்கடன் பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்கான சான்றிதழ், ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிடச் சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், ஐந்து ரோடு, சேலம்-636004 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய மாவட்ட தொழில் மையத்தை 0427 - 2448505, 2447878 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.