கோவை காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நஞ்சப்பா சாலையில் ரூ.167 கோடியில் முதல் அடுக்கு மேம்பாலம், ரூ.100 கோடியில் நூறடி சாலையிலிருந்து ஆவாரம்பாளையம் சாலை பிபிஎல் கார்னர் சந்திப்பு வரை இரண்டாவது அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது.
நஞ்சப்பா சாலையில் பார்க் கேட் சந்திப்பு அருகிலிருந்து தொடங்கும் முதல் அடுக்கு மேம்பாலத்தில் செல்லும்போது, கணபதி லட்சுமிபுரம் பிரிவு அருகே தான் இறங்க முடியும். எனவே, வழியில் உள்ள கிராஸ் கட் சாலை, 100 அடி சாலைகளில் இறங்கும்வகையில் இறங்குதளங்கள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, இரு இறங்குதளங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பார்க் கேட் சந்திப்பிலிருந்து மேம்பாலத்தில் ஏறும் வாகனங்கள், 100 அடி சாலையில் கீழே இறங்கும் வகையில் ஒரு இறங்குதளம், மறுமுனையில் கணபதி லட்சுமிபுரம் சந்திப்பு அருகேயிருந்து நஞ்சப்பா சாலை மேம்பாலத்தில் ஏறும் வாகனங்கள் காந்திபுரம் விரைவு, நகரப் பேருந்து நிலையங்கள், கிராஸ்கட் சாலை சந்திப்புப் பகுதிகளில் இறங்கும் வகையில் ஒரு இறங்குதளம் அமைக்கப்பட உள்ளது. இவ்விரு இறங்குதளங்களும் ரூ.24 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளன. இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கைக்கு அரசின் ஒப்புதல் பெற்று, ஒப்பந்தம்விட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்படும்’’ என்றனர்.