Regional01

மஞ்சளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 10 ஆயிரம் அரசு பரிசீலிப்பதாக வேளாண் துறை தகவல்

செய்திப்பிரிவு

மஞ்சளுக்கு குறைந்தபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் என நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது என வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக மஞ்சள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக, மஞ்சள் விலை சராசரியாக குவிண்டால் ரூ.5000 முதல் 6000 வரையே இருந்து வருகிறது. இதனால் மஞ்சள் சாகுபடி செய்யும் விவசயிகள் மாற்றுப்பயிருக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. மஞ்சள் விளைவித்த விவசாயிகள், விலை உயர்வை எதிர்பார்த்து கிடங்குகளில் இருப்பு வைத்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், மஞ்சளுக்கு குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கு வேளாண்மைத்துறை அனுப்பியுள்ள பதிலில், ‘மஞ்சளுக்கு குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இது தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மரவள்ளி கிழங்கிற்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பான மனுவுக்கு வேளாண்மைத்துறை அளித்துள்ள பதிலில், ‘மரவள்ளிக் கிழங்கிற்கு ரூ.8000 வீதம் விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக, சேலம் மாவட்டத்தில் விவசாயிகள், ஆலை அதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைக் கொண்டு முத்தரப்பு கூட்டம் இம்மாதம் நடைபெற்றது. இதில், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT