Regional01

சேலத்தில் திருட்டு, வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டவர் கைது

செய்திப்பிரிவு

சேலத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்தவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 11 பவுன் நகை மற்றும் இரண்டு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

சேலம் சூரமங்கலம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் இரண்டு வீடுகளில் தொடர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறி நடந்தது. குற்றவாளியை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைத்து மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியதில், சின்னேரிவயக்காட்டைச் சேர்ந்த பாண்டியன் (40) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, போலீஸார் பாண்டியன் வீட்டுக்கு சென்றபோது, அங்கு தாதகாப்பட்டியைச் சேர்ந்த அண்ணாமலை (37) என்பவர் இருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் பாண்டியன், அவரது மனைவி அமரா (27) ஆகியோருடன் சேர்ந்து அண்ணாமலையும் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து, அண்ணாமலை மற்றும் அமராவை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பாண்டியனை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 4 வீடுகளில் திருடியதும், இரண்டு வழிப்பறியில் ஈடுபட்டதையும் பாண்டியன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரிடமிருந்த 11 பவுன் முத்து மாலை மற்றும் இரண்டு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

கைதான பாண்டியன் மீது சேலம் மாநகர பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் 30 திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிந்தது.

SCROLL FOR NEXT