மாற்றுத்திறனாளிகள் போராட்டம் எதிரொலியாக, நல்லகவுண்டம்பாளையத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனையை அளவீடு செய்து வழங்கும் பணியை வருவாய்துறையினர் நேற்று மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில், பவானியை அடுத்த நல்லகவுண்டம்பாளையத்தில் 59 பேருக்கும், மொடக்குறிச்சியை அடுத்த காகத்தில் 26 பேருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப் பட்டது. ஆனால், இந்த நிலத்தை பிரித்து அளவீடு செய்து தரும் பணியை வருவாய்த்துறையினர் மேற்கொள்ளவில்லை. இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த மாற்றுத்திறனாளிகள், ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத் தலைவர் துரைராஜ் தலைமையில் நல்லகவுண்டன்பாளையத்தில் காலவரையற்ற போராட்டத்தை நேற்று முன் தினம் தொடங்கினர். இவர்களிடம் வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இன்று (24-ம்தேதி) நிலத்தை அளவீடு செய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.
இதன்படி, மாற்றுத்திறனாளி களுக்கு என ஒதுக்கப்பட்ட இரு இடங்களையும் சமப்படுத்தி, அளவிடும் பணியை வருவாய்த்துறையினர் நேற்று மேற்கொண்டனர். இந்த இரு இடங்களிலும் வீட்டுமனைப்பட்டா பெற்றவர்களுக்கு உரிய இடம் அளவீடு செய்யப்பட்டு, விரைவாக ஒப்படைக்கப்படும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.