நிவர் புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிர்களை காப்பீடு செய்வது இன்றுடன் (நவ.25) நிறைவடைகிறது என வேளாண்மை துறையினர் தெரிவித்ததால் விவசாயிகள் கடும் அவதிக் குள்ளாகினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு சம்பா, தாளடி நெல் 1,24,524 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கு தனியார் காப்பீட்டு நிறுவனம் மூலம் தற்போது பயிர்க் காப்பீடு பெறப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.489 வீதம் பிரீமியம் தொகையை விவசாயிகள் செலுத்த வேண்டும். பிரீமியம் செலுத்த டிச.15-ம் தேதி இறுதிநாளாக ஆட்சியர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நிவர் புயலால் பயிர்கள் பாதித்தால், அதன்பிறகு காப்பீடு பெற பிரீமியத் தொகை செலுத்த முடியாது. எனவே, இன்றைக்குள் (நவ.25) பிரீமியத்தை செலுத்த விவசாயிகளிடம் வேளாண்மை துறை அலுவலர்கள் வாய்மொழியாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், மாவட்டத்தில் பல இடங் களில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் நீண்டநேரம் காத்திருந்து பிரீமியத்தை செலுத்தி வருகின்றனர்.
ஆனால், அவ்வப்போது மின்சாரம் தடைபட்டதாலும், கணினியில் ஏற்பட்ட சர்வர் குளறுபடிகள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் கணினி சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ் பெறுவதில் தாமதம் போன்றவற்றால் பயிர்க் காப்பீடு செய்ய வந்த விவசாயிகள் பலமணி நேரம் காத்திருந்து பிரீமியம் செலுத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளர் சுந்தரவிமலநாதன் கூறியது: பயிர்க் காப்பீடு செலுத்த டிச.15-ம் தேதி கடைசிநாள் என் அறிவித்ததால், பல விவசாயிகள் காப்பீடு பிரீமியத்தை செலுத்தாமல் இருந்தனர். ஆனால், தற்போது புயல் காரணமாக பயிர்க் காப்பீடு செய்ய இன்று (நவ.25) கடைசி என கூறுகின்றனர். பல இடங்களில் இ-சேவை மையங்களில் சர்வரில் குளறுபடிகள் ஏற்படுகின்றன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளிடமிருந்து மட்டுமே காப்பீடு பிரீமியம் பெறப்படுகிறது. இதனால் கடன்பெறாத விவசாயிகள் காப்பீடு செய்ய முடியாமல் தவிக்கின்றனர் என்றார்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின் கூறியது: காப்பீடு பிரீமியம் செலுத்த டிச.15-ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது நிவர் புயலால் பயிர் சேதமானால், அதன்பின்னர் அந்த பயிர்களுக்கு காப்பீடு செலுத்த முடியாது. எனவேதான், விவசாயிகளை இன்றைக்குள் (நவ.25) பிரீமியத்தை செலுத்த கூறியுள்ளோம். ஆனால், பல இடங்களில் மின்தடை, சர்வர் பிரச்சினைகள் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.