வேலூரில் பாதிரியாரை தாக்கி ரூ.9 லட்சம் ரொக்கம், தங்கச் சங்கிலி ஆகியவற்றை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தின் பாதிரிய ராக இருப்பவர் மலையப்பன் (60).இவர், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தேவாலயத்துக்கு வந்த 4 மர்ம நபர்கள், "தாங்கள் வாங்கியுள்ள புதிய வாகனத்துக்கு ஆசிர்வாதம் செய்ய வேண்டும்" எனக் கூறி வெளியே அழைத்துள்ளனர்.
அதன்படி, வெளியே வந்த மலையப்பனை திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள் அவரை அருகே இருந்த அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். நாற்காலியில் அவரை கட்டிவிட்டு அங்கிருந்த பீரோவில் இருந்து ரூ.9 லட்சம் ரொக்கப் பணத்தையும், அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துச் சென்றுள்ளனர். இரவு 11.30 மணி யளவில் நாற்காலி கட்டுகளை விடுவித்துக் கொண்ட மலையப் பன், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத் தில் புகாரளித்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் புனிதா மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை செய்தனர். பாதிரியாருக்கு ஏற்பட்ட காயத்துக் கும் மர்ம நபர்கள் தாக்கியதாக கூறப்படும் இடத்தில் தரையில்படர்ந்திருந்த ரத்தத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கீழே தரையில் படர்ந்திருந்த ரத்த மாதிரிகளையும் பாதிரியார் மலையப்பனின் ரத்த மாதிரியையும் காவல் துறையின் தடய அறிவியல் நிபுணர்கள் மூலம் சேகரித்துச் சென்றுள்ளனர். மேலும், ஹோலி கிராஸ் பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சந்தேக நபர் களின் வாகன நடமாட்டம் குறித்த காட்சிகள் ஏதாவது பதிவாகி யுள்ளதா? என காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.