Regional01

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கணவன், மனைவி தீக்குளிக்க முயற்சி

செய்திப்பிரிவு

மதுரை கோவில்பாப்பாகுடியைச் சேர்ந்தவர் கோபால்சாமி. இவர், தனது மனைவி, குழந்தைகளுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். திடீரென நுழைவு வாயில் முன் கோபால்சாமியும், அவரது மனைவியும் தங்களின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர், கோபால்சாமியையும், அவரது மனைவி, குழந்தைகளையும் தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆய்வாளர் மலைச்சாமி அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

கோபால்சாமி கூறியதாவது: எனக்குச் சொந்தமான இரண்டே முக்கால் ஏக்கர் நிலத்தை எனது உறவினர் மற்றும் எனது ஊரைச் சேர்ந்த மதிவாணன் உள்ளிட்ட சிலர் அபகரித்து விட்டனர். இது பற்றி தட்டிக் கேட்டபோது என்னை கத்தியால் தாக்கினர். காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த செப்டம்பரில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ஐஜியிடமும் புகார் தெரிவித்தேன். அதன்பின்பும் நடவடிக்கை இல்லை. இதனால் நியாயம் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தோம் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT