கழிவு நீரை அகற்ற வலியுறுத்தி, சேலம் ஆவின் பால்பண்ணை முன்பு மாடுகளுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் தளவாய்ப்பட்டியில் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீரால் ரெட்டிக்காரன்வட்டம், நாகர்கோவில் வட்டம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதையடுத்து, ஆவின் நிர்வாகம் ரூ.45 லட்சம் மதிப்பில் கழிவு நீரை சுத்திகரித்து, தளவாய்ப்பட்டி ஏரி அல்லது சேலத்தாம்பட்டி ஏரியில் கலக்க முடிவு செய்திருந்தது. ஆனால், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை ஏரியில் கலக்க ஊராட்சி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று கழிவு நீரை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாடுகளுடன் ஆவின் பால் பண்ணை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற இரும்பாலை இன்ஸ்பெக்டர் தனசேகரன், வட்டாட்சியர் கோமதி, ஆவின் தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், கழிவு நீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.