சேலம் செட்டிச்சாவடியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால், அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள செட்டிச்சாவடி கிராமத்தில் சேலம் மாநகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு மலைபோல் குவிந்துள்ள குப்பையில் நேற்று தீப்பற்றியதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. நேரம் செல்ல செல்ல புகை கிராம் பகுதி முழுவதும் பரவியது. இதனால், கிராம மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற சேலம் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் தீயை சுமார் 3 மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீ பிற இடங்களுக்கு பரவாமல் தடுக்க குப்பைகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, “குப்பை கழிவில் உள்ள இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க வருபவர்கள் குப்பையில் தீ வைத்து செல்கின்றனர். இதை தடுக்க குப்பை கிடங்கிற்குள் வெளியாட்கள் செல்வதை கண்காணிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
பட விளக்கம்
சேலம் செட்டிச்சாவடி பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.
படம்: எஸ். குரு பிரசாத்