Regional01

சர்க்கரை ஆலை கொதிகலன் சாம்பலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோரி மனு

செய்திப்பிரிவு

அந்தியூரில் தனியார் சர்க்கரை ஆலை கொதிகலன் சாம்பல் கொட்டப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோரி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த வேம்பத்தி ஆப்பக்கூடல், ஒரிச்சேரி, புன்னம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் தனியார் சர்க்கரை ஆலை கொதிகலனில் பயன்படுத்திய நிலக்கரி சாம்பல் பல ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டுள்ளது. நிலக்கரிச் சாம்பல் கொட்டப்பட்ட இடத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், ஆடு மாடு மேய்க்கவும், அருகம்புல் பறிக்கவும், விறகு சேகரிக்கவும் நிலக்கரி சாம்பல் குவிக்கப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது சாம்பலில் கால் புதைந்து, கால்களின் மேல் உள்ள தோல் உரிந்து புண்ணாகியுள்ளது. பலருக்கு கால் அழுகிப்போய், பல ஆண்டுகளாக வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், சாம்பல் கழிவுகளால் பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் அந்தியூர் வட்டாட்சியர் மாரிமுத்துவை சந்தித்து சிகிச்சை மற்றும் நிவாரணம் பெற்றுத் தரக்கோரியும், ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை கோரியும் நேற்று மனு அளித்தனர். இந்த நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், அந்தியூர் வட்ட செயலாளர் எம்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பட விளக்கம்

தனியார் சர்க்கரை ஆலை கொதிகலன் சாம்பல் கொட்டப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோரி அந்தியூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT