சேலம் மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் உழவர்-அலுவலர் தொடர்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறைகளில் விரிவாக்கப் பணிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நவீன வேளாண் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் உழவர் நலன் காக்கும் மானியத் திட்டங்களை விவசாயிகளிடையே உரிய நேரத்தில் கொண்டு செல்ல உழவர் - அலுவலர் தொடர்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் இத்திட்டம் அக்டோபர் 5-ம் தேதி முதல் 2021 ஏப்ரல் 3-ம் தேதி வரை முதல் 6 மாதத்துக்கும், வரும் 2021 ஏப்ரல் 5-ம் தேதி முதல் 2021 அக்டோபர் 2-ம் தேதி வரை அடுத்த ஆறு மாதத்துக்கும் செயல்படுத்தப்படும். இதற்காக கிராம ஊராட்சி வாரியாக வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை களப்பணியாளர்கள் செல்ல நிரந்தர பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வேளாண், தேட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஊராட்சி களுக்கு நேரடியாக சென்று குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகள், ஆதி திராவிடர், பழங்குடியின விவசாயிகள் 2 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானியத் திட்டங்கள் குறித்த விளக்கங்களும், பயிற்சியும் உரிய கால இடைவெளியில் வழங்கவுள்ளனர்.
இப்பயணத்தின்போது, விரிவாக்க அலுவலர்கள் வயல் ஆய்வு மேற்கொண்டு பயிர் சாகுபடி தொடர்பான விவசாய பிரச்சினைகளுக்கு உரிய பரிந்துரைகள் செய்வர். மேலும், வானிலை முன்னறிவிப்பு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.