தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுசம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஒருநபர் ஆணையத்திடம், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 5 பேர் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் வைத்துநீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். இதுவரை 21 கட்டமாகவிசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 517 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 மாத இடைவெளிக்குப் பிறகு22-ம் கட்ட விசாரணை தூத்துக்குடியில் நேற்று தொடங்கியது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில்பார்த்த, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 5 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். ஒருவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து வரும் 27-ம் தேதி வரை 5 நாட்கள் விசாரணை நடைபெறுகிறது.