2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான 6 வயது முதல் 18 வயது வரையுள்ள பள்ளி செல்லாக் குழந்தைகள், இடைநின்ற மாணவர்கள், மீன்பிடித் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தூத்துக்குடி நகர்புற வட்டார வள மையத்துக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடலோரப் பகுதியில் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில், மாவட்டஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் மற்றும் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் காசி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த
கணக்கெடுப்பின் மூலம் 10 பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டறியப்பட்டு, அந்த மாணவர்களுக்குகல்வியின் அவசியம் மற்றும் சலுகைகள் தொடர்பான விவரங்கள்எடுத்துரைக்கப்பட்டன. கண்டறியப் பட்ட அனைத்து குழந்தைகளையும் அவர்களது வயதுக்கேற்ற வகுப்பில் சேர்த்து, பள்ளி திறந்தவுடன் அவர்கள் தொடர்ச்சியாக வகுப்புக்கு செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
மேலும், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற கல்வித் தன்னார்வலர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என தூத்துக்குடி நகர்ப்புற வட்டார வள மைய மேற்பார்வையாளர் அமுதா தெரிவித்தார்.
கணக்கெடுப்பின்போது வட்டார வள ஆசிரியர் பயிற்றுநர்கள் மெல்சியா, பால்சாமி, சிறப்பு ஆசிரியர்கள் விண்ணரசி, டாரதி, ஆப்பிள்ஜெயா, திரேஸ்புரம் ஆர்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் லீமாரோஸ், அருணா மற்றும் சிறப்பு ஆசிரியர் ராஜா சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள், தங்களது பகுதியில் பள்ளி செல்லாக் குழந்தைகள் இருப்பின் அவர்களது விவரங்களை செல்போன் எண் 9788859173-க்கும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பற்றிய தகவல்களை செல்போன் எண் 9788859188-க்கும் தகவல் அளிக்கலாம் என உதவி திட்ட அலுவலர் தெரிவித்தார்.