ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்வதற்கு வசதியாக இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கென ஆயுர்வேதம் பயில்வோருக்கு முறையான பயிற்சியை அவர்களது பாடத் திட்டத்தில் சேர்க்கவும், இது முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பொதுவான அறுவை சிகிச்சை, பல் மற்றும் கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்டவற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கிடைக்கும். இதற்காக இந்திய மருத்துவக் கவுன்சில் (ஆயுர்வேத முதுகலை படிப்பு) ஒழுங்குமுறை சட்டம் 2016-ல் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆயுர்வேத மருத்துவத்தில் ஷால்யா (பொது அறுவை சிகிச்சை), ஷாலக்யா (காது, மூக்கு, தொண்டை, இஎன்ஜி, கண், கழுத்து, பல்) உள்ளிட்டவற்றுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அரசாணை நவம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் முதுகலை (ஷால்யா மற்றும் ஷாலக்யா) பயில்வோருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். இதற்கான பாடத் திட்டம் மற்றும் பயிற்சிகளை அளித்து தன்னிச்சையாக அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு அவர்களை தயார்படுத்த வேண்டும்.
இதன்படி ஆயுர்வேத மருத்துவர்கள் மிகவும் சாதாரண சிகிச்சைகளான தோல் சார்ந்த பிரச்சினை, கண்புரை நீக்கம், பல் சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.
ஆயுர்வேத முதுகலை பாடத் திட்டத்தில் 34 விதமான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு பயிற்சி அளிக்கவும் அவை எந்த வகையான அறுவை சிகிச்சைகள் என்பதையும் மருத்துவக் கவுன்சில் பட்டியலிட்டுள்ளது. இது தவிர கண் சார்ந்து 9 விதமான அறுவை சிகிச்சைகளும், மூக்கு மற்றும் காது பகுதியில் தலா 3 விதமான அறுவை சிகிச்சைகளும், தொண்டை, பல் சிகிச்சையில் 2 வித அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.