பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த சின்னக்கல்ராயன் தெற்கு நாடு கிராமத்தில், கைக்கான் வளவு காட்டாற்றின் உபரிநீரை கரியகோயில் அணைக்கு திருப்ப ரூ.7.30 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
சின்னக்கல்ராயன் மலையில் உள்ள தெற்கு நாடு கிராமத்தின் வழியாக கைக்கான் வளவு காட்டாறு செல்கிறது.
இந்நிலையில், பெத்த நாயக்கன்பாளையம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கைக்கான் வளவு காட்டாற்றின் உபரிநீரை வீணாகாமல் தடுத்து, ரூ.7.30 கோடியில் தடுப்பணை, கால்வாய் அமைத்து, கரியகோயில் அணைக்கு நீர் திருப்பும் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், சின்னக்கல் ராயன் தெற்கு நாடு கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் ஆட்சியர் ராமன், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன், ஆத்தூர் எம்எல்ஏ சின்னதம்பி ஆகியோர் இத்திட்டத்துக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து பெரிய கல்ராயன் மலை, மேல்நாடு மற்றும் கீழ்நாடு கிராமங்கள், சின்னக்கல்ராயன் மலை, தெற்கு நாடு மற்றும் வடக்கு நாடு கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 100 மலைவாழ் மக்களுக்கு, இந்து மலையாளி சாதிச் சான்றிதழை ஆட்சியர் ராமன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், பொதுப் பணித்துறை, நீர்வள ஆதாரத் துறையின் சரபங்கா வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் கவுதமன், ஆத்தூர் கோட்டாட்சியர் துரை, பெத்தநாயக்கன் பாளையம் வட்டாட்சியர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.