Regional01

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கோரிக்கை

செய்திப்பிரிவு

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும், என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் ஈரோடு மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்த அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதற்கு ஆளுநர் காலம் தாழ்த்துவது மனிதாபி மானமற்றது. ஏற்கெனவே எதிர்பார்த்தது போல், அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததற்காக அதிமுக தொண்டர்கள் தான் கவலைப்பட வேண்டும். இந்த கூட்டணி தமிழகத்துக்கு நல்லதல்ல. பிஹார், மகாராஷ்டிராவில் நடந்ததுபோல் அதிமுகவை பாஜக பலவீனப்படுத்தும்.

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில இடஒதுக்கீடு வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த சட்டத்தை கொண்டு வர பரிந்துரை செய்த குழுவினர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

எனவே, இடஒதுக்கீட்டை அதிகப் படுத்த வேண்டும். தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்வது தேவையற்றது, என்றார்.

SCROLL FOR NEXT