சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தேர்தல் பிரச்சாரப் பரப்புரை பயணத்தை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். கரோனா ஊரடங்கை மீறியதாக அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகிறார். மூன்றாவது நாளாக நேற்று நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் சாலை மறியல் செய்தனர். திருச்செந்தூரில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 96 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள இடைச்சிவிளை மறியல் செய்த 120 பேர், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முன் ஜெகன் பெரியசாமி தலைமையில் மறியல் செய்த 100 பேர் என மாவட்டம் முழுவதும் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.