Regional02

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு இதுவரை 109 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு: எஸ்பி தகவல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு இதுவரை 109 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருவதால், அவற்றுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், அந்தந்த பகுதி டிஎஸ்பிகள் தலைமையில் காணாமல் போனவர்களின் உறவினர்களை அழைத்து சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து விசாரணை நடத்த அனைத்து துணைக்கோட்ட டிஎஸ்பிகளுக்கும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி 03.10.2020-ல் முதலாவது சிறப்பு முகாம் 8 துணைக் கோட்டங்களிலும் நடத்தப்பட்டது. அப்போது காணாமல் போன 34 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக 2-வது சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தூத்துக்குடியில் 2 இடங்கள், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம்,, சாத்தான்குளம், மணியாச்சி, விளாத்திகுளம், கோவில்பட்டி என மொத்தம் 8 இடங்களில் இம்முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி ராஜ் மஹாலில் நகர டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் நடைபெற்ற முகாமை எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

முகாமுக்கு வந்துள்ள வழக்கின் மனுதாரர்கள் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் புதிதாக காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள், அவர்களின் கைவிரல் ரேகை போன்றவை கிடைக்கப் பெற்றிருந்தால் அதை கொடுப்பதன் மூலம் காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும். காணாமல் போனவர்களை உயிருடன் மீட்டுக்கொடுப்பதே எங்களது நோக்கம் ஆகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 109 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் 8 பேரும், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 2 பேரும், பாலியில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் 18 பேரும் அடங்குவர். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 61 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, ரவுடித்தனம் செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ், இன்ஸ்பெக்டர்கள் தென்பாகம் ஆனந்தராஜன், மத்தியபாகம் ஜெயப்பிரகாஷ், தாளமுத்து நகர் ஜெயந்தி, எஸ்ஐகள் ராஜாமணி, ஜனார்த்தனன் மற்றும் காணாமல் போன வழக்குகளின் மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT