தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு முகாமில் புதிய வாக்காளர்களை சேர்க்க மதுரை மாவட்ட அதிமுக, திமுகவினர் ஆர்வம் காட்டினர்.
தமிழகத்தில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் பயன்படுத்தும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. நவ.16-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நவ.21, 22, டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் சிறப்பு முகாம் மதுரை மாவட்டத்தில் உள்ள 2,716 வாக்குச்சாவடிகளிலும் நடந்தது. இதில் புதிய, விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதில் அதிமுக, திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் ஆர்வம் காட்டினர்.
மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் உள்ளிட்ட அலுவலர்கள் முகாம்களை கண்காணித்தனர்.
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன்முத்துராமலிங்கம் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று கட்சியினரின் பணிகளை ஆய்வு செய்தார். உடன் முன்னாள் மேயர் பெ.குழந்தைவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றனர்.
இதேபோல் அதிமுக, திமுக உட்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் தங்கள் கட்சி முகவர்களை ஊக்கப்படுத்தினர்.
முதல் நாளான நேற்று 25 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்க மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று 2-ம் நாள் சிறப்பு முகாம் நடக்கிறது.